May 25, 2013

R.I.P TMS

T.M.Soundararajan is a singer of generation. Many generation. He is a singer of culture, identity and every day life. He is a singer who inspired many when he sang and also when he stopped. Its difficult to imagine Sivaji or MGR without TMS. Its difficult to imagine Murugan festivals without his songs. Its difficult to imagine the pristine life that existed before the fast paced one of today. He has lived his life and takes leave. But his voice and his legacy is here to stay. With Love Vicky

May 19, 2013

DL0239

This is a review of a Tamil book named "Pala nerangalil pala manidhargal" which I read enroute Amsterdam to Atlanta in flight number DL0239. This was published in the website: omnibus.com in this URL.

பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி

சிறப்பு  பதிவர் : விக்கி

டிஎல் இருநூற்று முப்பத்து ஒன்பதின் பொழுதுபோக்கு சாதனங்கள் வேலை செய்யவில்லை. வீட்டில் இரண்டு நாய்களுக்கு மேல் வைத்திருந்தால் அதிக வரி கட்ட வேண்டும் என்பது போன்ற அற்ப காரணங்களுக்கெல்லாம் அதிகமாய் மூட் அவுட் ஆகும் டச்சு மக்கள் பலரும் ஹை வால்யுமில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். "யூ காட்டபி கிட்டிங் மீ" என ஒரு கருப்பர் அமெரிக்க பெண்மணி மண்டையை குலுக்கிக் கொண்டிருந்தார். நான் ஒருவன் மட்டும் மனதுக்குள் சிரித்துக் கொண்டிருந்தேன்.

DL 0239 - ஆம்ஸ்டர்டாமிலிருந்து அட்லாண்டா செல்லும் ஏர்பஸ் A330-300. அன்றைக்கு அட்லாண்டா வழியாக ஒர்லாண்டோ பயணம் செய்து கொண்டிருந்த என் உவகைக்குக் காரணம், கைவசமிருந்த ஐஃபோன் நிறைய பாட்டும், பாட்டரி நிறைய சார்ஜும், கை நிறைய (போன முறை ஊருக்குச் சென்றபோது ஊறுகாய் அப்பளத்துக்கு பதிலாக நான் கொண்டு வந்த) தமிழ் புத்தகங்களும். 

சுஜாதாவின் சிறுகதை தொகுப்பு (பாகம் 1), லா. ச. ரா.வின் அபிதா, பாரதி மணியின் "பல நேரங்களில் பல மனிதர்கள்" ஆகிய விருப்பத் தேர்வுகளில் எதை முதலில் எடுக்கலாம் என்ற கேள்விக்கு, சுறுசுறுப்பாக ஏதாவது படிக்கலாம் என பதில் தோன்றியது. "பாரதி மணி" என்கிற பேரைப் பார்த்தவுடன் பரஸ்பர நண்பர் சுகாவின் முகநூல் பக்கத்தில் இவ்விருவரும் பரிமாறிக் கொள்ளும் நையாண்டி நினைவுக்கு வந்தது. 

மேலும், பாட்டையாவை எனக்கு ஏற்கனவே தெரியும் (ஆனால் அவருக்கு என்னைத் தெரியாது :-P). உயிர்மையில் அவரின் சில கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். தவிர, இந்தப் புத்தகம் பற்றி சுகா சொல்வனத்தில் எழுதியிருந்த "பாட்டையா பார்த்த மனிதர்கள்"  என்கிற கட்டுரையையும் படித்திருந்தேன். அதனால் முதலில் அவரின் புத்தகத்தை எடுத்தேன். 

 


நாஞ்சில் நாடனின் அணிந்துரையைத் தாண்டி இந்திரா பார்த்தசாரதியைப் படித்துக் கொண்டிருக்கும்போது, "வீ வெல்கம் அவர் பிஸினஸ் க்ளாஸ் பாஸன்ஜெர்ஸ் ஃபார் ப்ரையாரிட்டி போர்டிங்" என்ற ஒரு வழியாக அழைப்பு வந்தது. எழுந்து பேண்ட்டின் சுருக்கத்தை சரி செய்துவிட்டு எழுந்த இடத்திலேயே திரும்ப உட்கார்ந்து ஜனதா வகுப்பின் cattle classஐக் கூப்பிடும்வரை அமைதி காத்தேன்.

இரண்டு - நான்கு - இரண்டு என்ற இருக்கை அமைப்பில் 32C எண் இருக்கையை தேடிப் பிடித்தால் இன்ப அதிர்ச்சி. இரண்டு சீட்டுக்கப்பால் விவரிக்க முடியாத அளவிற்கு அழகான twenty something பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். ரோஜாப்பூ கலரில் இதுவரை எம் ஜி ஆர், ராஜீவ் காந்தி ஆகிய இருவரை மட்டுமே பார்த்திருப்பதாக புத்தகத்தில் சொன்ன பாட்டையா இவரைப் பார்த்திருந்தால், "நான் இதுவரை அந்த கலரில் பார்த்த மூன்று பேர்கள்" என மாற்றி எழுதியிருக்கக் கூடும்.

இருக்கையில் அமர்ந்து இன் ஃபிளைட் மேகசின்னை புரட்ட ஆரம்பித்தேன். யுன்னான் மாகாணத்தில் லிஜியாங் என்கிற ஊர் கல்யாணம் செய்துகொள்ளத் தோதானது என டெல்டா நிறுவனம் சத்தியம் செய்தபோது, "அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே" பாட்டின் தொடக்கத்தில் வரும் அதே குரலில் - "எக்ஸ்க்யுஸ் மீ". 

நிமிர்ந்த முதல் பார்வையில் ஜீன்ஸ் பேண்ட் தெரிந்தது. அதற்கு மேல் செல்ல, "BJORN BORG" என்கிற அன்ட்ராயர் பட்டி. O-க்கு மேலே ஞாபகமாய் ரெண்டு புள்ளி. கையில் சிகப்பு கலரில் பாஸ்போர்ட். அதன் அட்டையில் "எய்ரோப்பாஸ் செவியெனிபா லாட்விஜாஸ் ரிப்பப்ளிக்கா". அப்படியே இன்னும் கொஞ்சம் நிமிர்ந்தால் விக்கு விநாயகராம் வாசிக்கும் வாத்திய தொப்பை. அதில் ஃப்ளுரசன்ட் பச்சை நிறத்தில் சொல்லித்தான் தெரிய வேண்டிய உண்மை - "I am Lazy". அதற்கு மேலே சின்னதாக மீசை வைத்த தூங்குமூஞ்சி கண்கள். தலையில் திருப்பிப் போடப்பட்ட தொப்பி. விதியை நொந்துகொண்டே எழுந்து வெளியில் வந்து, அவன் உள்ளுக்குள் போக வழிவிட்டேன். டிவியும் பொழுதை சுவாரசியமாகப் போக்கும் இன்னபிற வழிகளும், பக்கவாட்டு வழி உட்பட எல்லாம், அடைக்கப்பட்டுவிட்ட நிலையில் மடியில் குப்புறப் படுத்திருந்தது புத்தகம். "இன்னைக்கி என்ன விட்டா உனக்கு யாரும் கிடயாது" என உதட்டில் பைப்போடு கமுக்கமாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தார் பாட்டையா.

சீட்டில் செட்டில் ஆகி பாட்டையும் பாட்டையாவையும் ஆரம்பித்தேன். "எனக்கொரு அன்னை வளர்த்தனள் என்னை" - இது இளையராஜா. "அருந்ததி ராயும் என் முதல் ஆங்கிலப் படமும்" - இது பாட்டையா. படக் குழுவினர், க்ரூ மெம்பர்ஸ் என்று அனைவரையும் போகிறவாக்கில் பெயர் குறிப்பிட்டு எழுதுகிறார். உலக அழகிகளில் ஒருவராகக் கருதப்பட்ட லீலா நாயுடு (அவர் கணவர் பெயர்), அருந்ததி ராயின் செல்ல நாயின் பெயர் என பட்டியல் நீள்கிறது. பாட்டையாவுக்கு இந்த வயதிலும் அபார நினைவாற்றல்.


ஒன்றரை மணி நேரம் இருக்கலாம். புத்தகம் பாதி முடிந்திருந்தது - பாட்டையா பார்த்த மனிதர்கள் எனக்குத் தெரிந்த மனிதர்களாக மாறிக் கொண்டிருந்தார்கள். அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி, வட துருவத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக அறிவித்தார் கேப்டன். எதிர்பார்த்ததைவிட ஹெட் வின்ட் அதிகமாக இருப்பதாகவும், அதனால் அரைமணி நேரம் பிரயாண நேரம் அதிகமாகலாம் எனவும் கவலை தெரிவித்தார். பாட்டையா விவரித்த, வழியில் எந்த பிளாட்பாரத்தைப் பார்த்தாலும் நிற்கும் ஜனதா எக்ஸ்ப்ரெஸ்ஸின் மூன்று நாள் டெல்லி- சென்னை பிரயாணம் நினைவுக்கு வந்தது. இந்த ரயிலில் உங்கள் குடும்பத்து பெரியவர்களில் யாரேனும் நிச்சயம் போயிருக்கக்கூடும். 

விமானத்தில் எங்கோ முன்னால் ஒரு தாய், "இப்போ நீ தூங்காட்டி, ஏர் ஹோஸ்டஸ் கிட்ட பாராச்சூட் வாங்கி உன்ன நடு வானத்துல இறக்கி விட்ருவேன்" என தன் பிரயாணக் களைப்பை நியாயமில்லாத ஷரத்துக்களாய் தன் நான்கு வயது பெண்ணிடம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தார். "திருவாடுதிரை ராஜரத்தினம்பிள்ளை தன் வீடு அருகில் வந்தவுடன் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி வீட்டுக்குச் சென்று விடுவார். அவர் உதவியாளர் கார்ட் வரும்வரை காத்திருந்து 50 ரூபாய் அபராதம் செலுத்துவார்" என பாட்டையா "நாதஸ்வரம் - என்னை மயக்கும் மகுடி" கட்டுரையில் கூறிய சுவாரஸ்ய சங்கதி நினைவுக்கு வந்தது.



னக்கு இரண்டு தலைமுறை முந்தியவர் பாட்டையா. அந்த தலைமுறையில் நம் வீட்டில் நிறைய பெருசுகள் உண்டு. வீட்டு வைபவங்களில், துஷ்டிக்களில் அவர்களிடம் பேசும்போது அவர்கள் காலத்திய மாபெரும் நிகழ்வுகளைக் குறித்து அவர்களுக்கு உண்டான அனுபவங்களை சுவாரஸ்யமாக ஞாபகப்படுத்திச் சொல்வார்கள் அவர்கள். உதாரணத்திற்கு காந்தி பிறந்த நாளன்றுதான்,  1975-ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் காலமானார். அதே இரவுதான் என் பெரியண்ணன் பிறந்தான். அன்று இரவு இனிப்புக் கடைகள் எல்லாம் அடைப்பு. கடை கடையாய் அலைந்து பால் வாங்கி, தானே எப்படி பால் கோவா கிண்டினார் என என் அம்மாவைப் பெற்ற தாத்தா அடிக்கடி நினைவு கூர்வார். பாட்டையாவின் புத்தகத்தைப் படிப்பதும் அப்படிதான். அவசரகால சட்டம் அமல்படுத்திய காலகட்டமாகட்டும், வங்கத் தந்தை முஜிபுர் ரஹ்மான் கொலையாகட்டும், ஆன் ஸாங் ஸு ச்சீ குறித்த கட்டுரையாகட்டும், அன்னை தெரஸாவின் நோபல் பரிசாகட்டும் - அன்றைய காலத்தின் சரித்திர முக்கியத்துவம் பெற்ற நிகழ்வுகளை சராசரி நினைவுகளோடு கலந்து கொடுத்து அவற்றை நேரடியாக அனுபவிக்க முடியாத குறையை இந்தப் புத்தகம் போக்குவது நிச்சயம்.

எந்த விமான பயணத்திலும் நான் சைவ உணவை குறிப்பாகக் கேட்டு முன்பதிவு செய்துவிடுவேன். ஆக, இந்த பயணத்தில் இத்தாலிய "ரவியோலி" பாஸ்தா முதலில் எனக்கு வழங்கப்பட்டது. கொழுக்கட்டைக்குள் தக்காளி, ஒரேகானோ, துளசி போட்ட திரட்டிப்பால். அந்த அபார சுவையும் மணமுமம், Twenty Something-கின் மூக்கைத் துளைத்து வயிற்றைக் கிள்ளியிருக்க வேண்டும். "Looks Delicious" என்றாள் அவள். "Tastes Delicious as well" என்றேன். "யூ பெட்" என அங்கலாய்த்தாள். பாட்டையா எப்படி தன் அனுபவ அறிவை அள்ளி வீசுவாரோ அதே மாதிரி, "விமான சிப்பந்திகள் விசேஷ தேவைகள் விண்ணப்பித்த பிரயாணிகளை முதலில் கவனிப்பது வழக்கம்" என்றேன். வாழும் மேதை ஒருவரை நேரில் பார்த்த பிரமிப்பில் விரிந்த கண்களை இன்னும் விரித்து, அடுத்த முறை தானும் இனி விமான பயணங்களில் சைவ உணவுக்கு மாறிவிடப் போவதாக அறிவித்தாள். உண்ட மயக்கம் கண்ணோரத்தில் தூக்கத்தைப் படர்த்தியது. 

இளையராஜாவிற்கு மிகவும் பிடித்த "Creedence ClearwaterRrevival" என்கிற ராக் பேண்டின் பாடல்களை முடுக்கிவிட்டு, புத்தகத்துக்குத் திரும்பினேன். 
 
  

"காந்திபாய் தேசாய் : தலைவர்களும் தனையர்களும்". துள்ளலான இசையின் பின்னணியில் கட்டுரையை படிக்கப் படிக்க, நெற்றிக்கண் அப்பா ரஜினிகாந்த் போன்ற ஒரு நிழலுருவம் என் மனக்கண்ணில் தோற்றம் பெற்றது. ஆனால் அந்த உருவம் காந்திபாய் தேசாயா அல்லது பாட்டையாவா என தெளிவாவதற்கு முன்னால் கட்டுரை முடிந்துவிட்டது.


எனக்கு முன்வரிசையில் உட்கார்ந்திருந்த மற்றொரு இந்தியர் மணியடித்து வைன் கேட்டுக் கொண்டிருந்தார். 'ஒருதரம்தான் கொடுப்போம்,' என விமானப் பணிப்பெண் மறுக்க, இவரோ தன் குடியுரிமையை விட்டுக் கொடுப்பதாயில்லை. சிங் இஸ் கிங்-கில் பட்டியாலா பெக்கை நினைத்து சிரித்தேன். படிக்கப் படிக்க சடாரென பாட்டையாவின் எல்லாக் கட்டுரைகளும் முடிந்து விட்டன. அவரது நண்பர்களின் கருத்துகள் ஆரம்பித்தன.

சோகமித்திரன், லால்குடி, சத்யராஜ் என தமிழகத்தின் "Who is Who"-வே அணிந்துரை எழுதியிருந்தது. அனைவருமே பாட்டையாவின் பன்முக திறமையை மையப்படுத்தி / அவரின் கலை வாழ்க்கையை மேற்கோள் காட்டி / அவரின் மாமனாரான திரு. க நா சு பற்றி கருத்து தெரிவித்திருந்தார்கள். இவர்களில் யாருமே குறிப்பாகச் சொல்லாத, ஆனால் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹை டெக் பரதேசியாக மாறி, புலம்பெயர் இந்தியனாகவும் தமிழனாகவும் வாழ்ந்து வரும் எனக்கு பளீரென பட்ட கருத்து இதுதான். 

நான் பார்த்தவரையில் வெளியூரில் வாழும் தமிழர்களின் இயல்பு இது:

1. இந்தி அல்லது ஆங்கிலம் பேசப் பழகியவுடன் அதை ஒரு அந்தஸ்தாக விரும்பி ஏற்றுக் கொண்டு தங்கள் பண்பாட்டு அடையாளத்தைத் தொலைத்து விடுகிறார்கள் (இவர்களை தமிழ்நாட்டிலும் அதிகம் பார்க்கலாம்).

2. தமிழர்கள் (மற்றும் வங்காளத்தவர்கள்) என்றால் தன் மொழியை / கலாசாரத்தை / உணவை இந்திய அடையாளத்திற்கும் மேலாக மதிக்கும் தீவிரவாதிகள் என்கிற அனாவசிய குற்றச்சாட்டைத் தவிர்க்க வேண்டிய நிர்பந்தத்தில் ரொட்டி தின்றும் இந்தி பேசியும் "நான் அவனில்லை" என அகில இந்திய அங்கீகாரத்தை பகிரங்கமாக நாடுகிறார்கள். 

3. இல்லை, பாட்டையா விவரித்த - வங்கதேசம் வாழ் தமிழர்களைப் போல - அண்டிப் பிழைக்க வந்து வேற்று கலாசாரச் சூழலில் ஒன்றி நாளடைவில் தம் தாய்மொழி மற்றும் கலாசாரம் சார்ந்த விஷயங்கள் எல்லாமே வாழ்க்கையின் இரண்டாம் பட்சம் / மூன்றாம் பட்சம் / அல்லது ஒரு பட்சமே இல்லை என மாறிவிடும் தமிழர்கள். எந்த குற்ற உணர்வும் இல்லாத (குற்ற உணர்வுக்கான தேவையும் இல்லாத) சராசரி  சந்தோஷ வர்க்கம்.

ஆனால் தனது ஐம்பது வருட டில்லி வாழ்க்கையில், வேற்று கலாசார அமைப்பில், வேற்று மொழி உத்தியோக வாழ்வில், நான் மேலே சொன்னதில் இரண்டாவது வகை குற்றச்சாட்டுக்கு பெயர் போன ஒரு சூழலில், பாரதி மணி தமிழராகவே நிலைத்திருக்கிறார். இந்தியராய் இருப்பதற்கு தமிழ் மொழி/ இசை/ உணவு/ பண்பாட்டைக் கடைபிடிப்பது தடையில்லை என்கிற அனுபவ தெளிவு இது. 

வேற்று பெரும்பான்மையினர் தேசத்திற்கு விரும்பி சென்று தன் அடையாளம் தொலைக்காமல் "beat them in their own game" என வளைந்து கொடுத்து அவர்கள் வாழ்வியலிலும் வெற்றி பெரும் சூரத்தனம் இது. புலம்பெயர் வாழ்வு சாதாரணமாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில் தம் தனித்துவமான தாய்மொழியும் பண்பாடும் வாய்க்கப்பெற்ற சிறுபான்மையினர் யாரும் வேற்று பிரதேசங்களிலும் நாடுகளிலும் தம் அடையாளத்தை தொலைக்கத் தேவையில்லை என பாட்டையா அளிக்கும் நம்பிக்கை, இந்த புத்தகம்.

கடைசி பக்கத்தை மூடவும், "வுட் யூ லைக் ஸம் கேஷ்யூ நட் ஸார்" என வெள்ளைக்கார விமானப் பணிப்பெண் தட்டை நீட்டினாள். பதிலுக்கு சிரித்தேன். என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு கடந்து சென்றாள். கொல்லம் பகுதிக்கு வந்த வெள்ளைக்காரன் முந்திரிப் பருப்பை ரோட்டோரத்தில் விற்ற பெண்ணிடம் "இது என்ன?" என கேட்க, அவளோ "என்ன விலை?" என கேட்பதாய் நினைத்துக் கொண்டு, காசுக்கு எட்டு என்பதை மலையாளத்தில் "காசினெட்டு" என பதிலளிக்க, அதுவே நாளடைவில் Cashew nut ஆனது என சுடச் சுட படித்தது அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


பல நேரங்களில் பல மனிதர்கள், 
பாரதி மணி,
உயிர்மை பதிப்பகம், ரூ. 100
இணையத்தில் வாங்க  : உயிர்மை, என்ஹெச்எம், My அங்காடி


புகைப்பட உதவி : My அங்காடி பால்ஹனுமான்,